10/21/10

கற்பனையில் ஓர் உலகம் !!!



அஞ்சலி ! பத்து வயது சுட்டிப் பெண். சின்ன வயது என்றாலும் கொஞ்சம் பக்குவமான பெண்.  ஏன் என்றால் அவள் பிறந்தது ஏழைக் குடும்பத்தில் தான்.  அவளின் அம்மா அப்பா அவளுக்கு வீட்டு கஷ்டங்களை அவ்வப்போது எடுத்து சொல்வார்கள்.  எனவே தான் அந்த பக்குவம்.  அம்மா அப்பா ஏழை என்றாலும் அவளுடைய நல்ல நண்பர்கள். அது அவள் செய்த பாக்கியம் என்றே நினைத்தாள்.  பக்கத்து வீட்டு மது ! அஞ்சலியின் தோழி ! பள்ளித் தோழியும் கூட.  மது நல்ல வசதியான பெண்.  அவள் அணியும் ஆடை, வளையல், கம்மல் பாசி என்று எல்லா பொருளிலும் அவளின் வசதி தெரியும்.  அஞ்சலி சின்ன பொண்ணு தானே. தனக்கு இப்படி இல்லையே என்று அவளின் குட்டி மனதும் அசைப் படத்தான் செய்யும்.

அஞ்சலி தன் அம்மாவிடம் எல்லா விசயங்களையும் சொல்லுவாள்.  ஏன் மது பற்றி கூட சொல்லுவாள்.  ஆனால் எனக்கும் அவள் மாதிரி டிரஸ், பாசி வேண்டும் என்று தன் ஆசைகளை மட்டும் காட்டிக் கொள்வதில்லை.  அம்மா அப்பா வருத்தப் படுவார்கள் என்று எண்ணுவாள்.  இருந்தாலும்  அவள் மனதில் உள்ளதை தனக்கென்ற ஒரு கற்பனை உலகில் இருப்பதாய் எண்ணி அதில் செல்ல தொடங்கினாள்.

அது ஒரு குட்டி கற்பனை உலகம்.  அங்கே அவள் ஒரு குட்டி ராணி.  அவள் கேட்டது எல்லாம் கிடைத்தது.  தோழி மதுவை  விட அழகான டிரஸ், நகைகள் என்று எல்லாம்
ஏராளம் ஏராளமாய்.  அஞ்சலிக்கு தன் நிஜ உலகை விட கற்பனை உலகம் மிகவும்
பிடித்துப் போனது.

அஞ்சலி தன் அம்மா அப்பாவிடம் இருந்து தனிமையில் இருக்க ஆரம்பித்தாள். மகளின் மாற்றம் ஏழைப் பெற்றோர்களுக்குப் புரிய வில்லை.  தன்னுடைய கற்பனை வாழ்வில் நிஜ வாழ்வை தொலைக்க ஆரம்பித்தாள்.  மனதளவில் ஓடிய அஞ்சலியின் கற்பனை வாழ்வு தூக்கத்தில் புலம்பலாய் வரத் தொடங்கியது.   அம்மாவுக்கு கொஞ்சம் புரியத் தொடங்கியது.

அம்மா ஒரு நாள் அஞ்சலியிடம் ஆறுதலாய் பேசினாள்.  " அஞ்சலி ! கற்பனை வேறு. நிஜம் வேறு.  கற்பனையில் வாழும் வாழ்க்கையை நிஜத்தில் அனுபவிக்க முடியாது.  கற்பனை வாழ்வில் உழைப்பே இல்லாமல் எல்லாம் வாங்கி விட முடியும்.  ஆனால் நிஜத்தில் நீ உழைத்தால் தான் எல்லாம் கிடைக்கும்.  கற்பனை செய்.  ஆனால் அதிலேயே வாழ நினைக்காதே.  கற்பனையை நிஜமாக்க நன்றாக படி.  இன்று நம்மிடத்தில் இருக்கும் ஏழ்மை தொடர் கதை அல்ல.  உன் உழைப்பு கூட அதை மாற்ற முடியும்."

இருந்தாலும் அஞ்சலியால் தன் கற்பனை வாழ்வில் இருந்து உடனே வெளி வர முடிய வில்லை.  அவளின் அம்மா அப்பா அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே கொண்டு வருகிறார்கள்.

அஞ்சலியைப் போல இன்று நிறைய பிள்ளைகள் தன் ஏக்கங்களை மனதில் சுமந்து கொண்டே வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.  அவர்களின் மனமறிந்து அவர்களை  அரவணைத்து கொண்டு செல்வது பெற்றோர்களின் கடமையே !!!



3 comments:

  1. தவறு எழாமல்
    அழகாய்
    ஒரு குட்டி கதை
    அதைவிட
    உண்மை கதைன்னு
    சொல்லலாம்
    பாரட்டுக்கள்
    அழகான புகைப்படம் ...

    ReplyDelete
  2. நமக்கே நமக்கான கற்பனை உலகம் மிகவும் சுகமானது. ஆனால் அதிலேயே மூழ்கிக்கிடப்பது தவறுதான்.

    நல்ல‌ கதை. ப‌ட‌த்தில் உள்ள‌ குழ‌ந்தை அழ‌கு..

    ReplyDelete
  3. அழகான விஷயம்.. சொன்ன விதமும் நல்லா இருக்குங்க.. :-)

    கற்பனையில் உள்ள வாழ்வை அடைய..
    கடுமையாய் உழைக்க வேண்டும்-னு
    கதையில் அழகா சொல்லிட்டீங்க.. :-)

    ReplyDelete